தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
இத்திருத்தலம் சென்னையில் தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இடத்தின் முந்திய பெயர் மாடையம்பதி என்பது ஆகும். பின்பு இது மாடம்பாக்கம் என்று ஆயிற்று.
மூலவர்: தேனுபுரீஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: தேனுகாம்பாள்
தல விருட்சம்: வில்வம்
கோவில் வரலாறு:
முன்பு கபில மகரிஷி என்ற முனிவர் சகரன் என்பவனின் மகனை அவன் செய்த தவறுக்காக சாபமிட்டார். அந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்தது. வசிஷ்ட முனிவரிடம் கேட்டதின் பெயரில் அவர், சகரனின் குலத்தில் வந்த பகீரதன் கங்கை நீரை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார்.
அதன்படி பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து சாப விமோசனம் தேடிக் கொண்டார்.
கபில மகரிஷியும் தன் கோபத்தாலும், சாபத்தாலும் சகரனின் தலைமுறை பெற்ற இன்னல்களுக்கு பிராயசித்தம் தேட எண்ணினார். சிவபூஜை செய்ய இடது கையில் சிவலிங்கத்தையும் வலது கையால் பூக்களை லிங்கத்தின் மீது தூவினார். சிவன் பிரத்தியட்சமாகி, தன்னை கையில் வைத்து பூஜை செய்தது எதற்காக என்று கேட்க, மணலில் வைக்க மனம் இல்லை என்றார்.
இடது கையில் வைத்து பூஜை செய்தது முறை அல்ல என்று கூறி அவரை ஒரு பசுவாக மாற்றினார். பசுவாக பிறந்த கபில மகரிஷி, சிவனை வழிபட்டு, அந்த இடத்திலேயே முக்தி பெற்றார்.
அந்த சமயத்தில் இந்த இடத்தை ஆண்ட மன்னர் ஒருவர் இந்த கோவிலை எழுப்பினார். பசு வடிவில் சிவனை கபில ரிஷி வழிபட்டதால், தேனுபுரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். தேனு என்றால் பசு என்று பொருள். இந்த சுவாமிக்கு உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார் என்றும் மற்றொரு பெயர் உண்டு. அன்னை யின் பெயர் தேனுகாம்பாள்.
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் சுமார் 9 அங்குல உயரத்தில் 3 அங்குல அகலத்தில் உள்ளது. இந்த லிங்கத்தில் பசு மிதித்த தழும்பும் கல்லடிபட்ட பள்ளமும் இருக்கின்றது. சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகபரணமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. இத்தலம் சின்ன அளவில் இருந்தாலும், மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது ஆகும்.
கோவில் தூண்களில் பல சிற்பங் கள் மிகவும் அழகாக செதுக்கப்பட்டு அனைவரையும் கவரக்கூடிய அளவில் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. உற்சவரும் அப்போது புறப்பாடாகிறார். மற்றும் ஒரு தூணில் விநாயகர் வீணையுடன் காட்சி தருகிறார். மற்றொரு தூணில் முருகபெருமான் யானை மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். அவரது இடது கையில் சேவல் உள்ளது.
சிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா. கங்கா, பார்வதியுடன் சிவபெருமான் வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் வீற்றிருக்கிற்றார். தஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கின்றார். பைரவர் இருக்கின்றார். மடியில் சீதையை அமர்த்திருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் அவர் பாதத்தை வணங்கியபடி ஸ்ரீ ஆஞ்சநேயர், ஐந்து முக பிரம்மா, ஆகிய சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக பார்ப்பவர் மனதை கவரும்படியாக இருக்கின்றது.
தக்ஷிணாமூர்த்தி தென்புறத்தில் ஆலமரம் இல்லாமல் இருக்கிறார். கையில் கிளியுடன் துர்க்கை அழகாக தோற்றமளிக்கிறார்.
இந்த திருத்தலத்தின் விசேஷம் என்னவென்றால் இங்கு வந்து வேண்டும் பக்தர்கள் அனைவரின் நியாயமான வேண்டுகோள் அனைத்தையும் சிவபெருமான் தீர்த்து வைக்கின்றார் என்பது அனைவரின் நம்பிக்கை.
முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாய் இருக்கின்றனர். கிரக தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து சரபேஸ்வரை வேண்டினால் தோஷம் நீங்கப்பெற்று நலமாய் வாழ்வது உறுதி என்கின்றனர்.
வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிப்பதை இங்கு தான் காண முடிகிறது. மேலும் வெள்ளைப் பூசணியில் நெய் விளக்கு ஏற்றி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடை பெறும். பங்குனி உத்திரத்தில் தெப்பத் திருவிழாவும், ஐப்பசி மாதம் அன்னாபி ஷேகமும் நடக்கிறது. சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப் படுகின்றது.ஒவ்வொரு பிரதோஷத் தன்று பக்தர்கள் அதிகமாக கூடுகின்றனர்,
தினமும் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 வரை, அதன் பின்பு மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை கோவில் வழிபாட்டுக்கு திறந்திருக்கும்.
0 comments: